[adinserter block=”3″]
பாரதத்தின் இரண்டு பெரிய இதிஹாசங்களாவன மஹாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகும்.இவை கிமு 5ஆம் நூற்றாண்டுக்கும்- கிபி 2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இயற்றபட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது .இவை இரண்டிலுமே இசை மற்றும் நடனங்களை பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் கதை அம்சங்களை பரதநாட்டியத்தில் பயன்படுத்தி அதனை மெருகூட்டிக்கொண்டு வருகின்றனர்.மஹாபாரதத்தில் ராஜசூய வேள்விக்கு வந்த அந்தணர்களை நடன கலைஞர்களும் நடிகர்களும் மகிழ்வித்தனர் என்று மஹாபாரதம் கூறுகின்றது.அர்ச்சுனன் நடனத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.தசரதன் தான் நடத்திய குதிரை வேள்விக்கு நடன மாதர் சமூகம் அனைத்தையும் அழைத்திருந்தார் என ராமாயணம் கூறுகின்றது.
இலங்காபுரியின்அரசனான இராவணன் மிகுந்த கலையார்வம் கொண்டிருந்ததனால் அவனது அரசவை அனுதினமும் ஆடலும் பாடலும் இசையோடு கலந்து மேலோங்கியிருந்தது. இராவணனின் மனைவியர் இக்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினார். மாயனின் மகளும் இலங்கையின் மஹாராணியுமான மண்டோதரி நடனக்கலையில் ஒப்பற்று விளங்கியதோடு அக்கலையை தனது அரசவை பெண்களுக்கும் பயிற்றுவித்து மெருகேற்றினால் என்று அறிய முடிகிறது .ஊர்வசி, மேனகை,அரும்பை, திலோத்தமை, பஞ்சசூடா முதலியோர் ராவணனை ராமன் வென்றதை பற்றி ஆடல்களை ஆடினார்கள்.இவை அனைத்தும் பாடல் மற்றும் பக்கவாத்தியங்களோடு நடைபெற்றது. இவ்வாறு விளங்குகின்ற இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் எவ்வாறான நவரசங்களை நடனத்திற்கு உபயோகித்து வந்தனர், வருகின்றனர் என்பதனை பற்றி விரிவாக நாம் நோக்கலாம்.
இராமாயணத்தில் பயனாக ரசம் எவ்வாறு தோன்றுகின்றது என்பதனை நோக்குவோமாயின் ஒரு சமயம் விசுவாமித்திரர் தான் செய்யும் யாகத்தினை அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக தனக்கு துணையாக ராமனை தரும்படி கேட்க , அந்நேரம் தசரதச்சக்கரவர்தியின் மனதில் ராமனை விடுவதில் பயம் தோன்றுகிறது, மற்றும் ராவணன் மாறு வேடம் பூண்டு சீதா தேவியை கவர்ந்து செல்லும் நேரம் சீதா தேவியின் மனதில் பய உணர்வு குடி கொள்கின்றது.இதனை அழகாக அபிநயித்து காட்டுவார்கள். இதன் நிறம் கருப்பு. இதன் ராகங்கள் கானடா, சுபபந்துவராளி, ரஞ்சனி ஆகும். இதன் அனுபாவமாக கை, கால் நடுக்கம், பயத்துடன்கூடிய கண் அசைவு ,வெளிறிய முகம், குரல் மாற்றம் என்பன. இதன் கடவுள் காலன். பயத்தை ஸ்தாயி பாவமாக கொண்ட இந்த பயாநக ரசத்தின் இலட்சணமானது ஒருவருக்கு பிடிக்காத நிகழ்வுகளை செய்யும் நேரம் ஏற்படும் வெறுப்பினாலும் வேதனையினாலும் உண்டாகுவது ஆகும்.
[adinserter block=”4″]

அடுத்ததாக சிருங்கார ரசத்தினை நம் நோக்குவோம் எனில் விசுவாமித்திரர் தனது யாகத்தினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இராமனையும், இலக்குமனையும் மிதிலைக்கு கூட்டி செல்கின்றார் .அச்சமயம் மிதிலை நாடு அரசனான ஜனகராஜனனின் மகளாகிய சீதாப்பிராட்டியின் சுயம்வரம் ஆரம்பமானது. அப்போது சீதாபிராட்டி அரண்மனையின் மேல் மாடத்தி நின்றுகொண்டிருந்தபோது இராமனும் அவளை கண்டான் சீதையும் ராமனை கண்டாள். ‘அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள்’ அச்சமயம் அவர்களது மனதில் எழுந்தது சிருங்கார ரசமாகும்.இதன் நிறம் பச்சையாகும். இராகங்கள் கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, மோகனம், காமாஸ், சுருட்டி என்பனவாகும். இதன் ஸ்தாயி பாவம் ரதி ஆகும்.இவ் ரசத்தின் தோற்றம் காதலில் இருந்து பிறந்தது. இதன் அனுபாவமாக கண் பார்வை, புருவங்களை அசைத்தல். இதன் கடவுள் விஷ்ணு. இதன் லட்சணம் என்னவெனில் ஒருவர் தான் விரும்பிய ஒன்றை அடைந்து அனுபவித்து மகிழ்தல் ஆகும். ஸ்ருங்காரமானது அயோகசிருங்காரம் ,விப்ரயோக சிருங்காரம்,சம்போக சிருங்காரம் என மூன்று வகையாக பிரிக்கலாம்.
அடுத்து யுத்த காலத்தில் இராமனிற்கும் இராவணனிற்கும் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளை இராவணன் நிராயுதபாணியாக நிற்பதை கண்ட இராமன் இன்று போய் நாளை வா என கூறுகின்றான். இவ்வாறு கூறுவது ஒரு வீரனது தூய்மையான வீரத்தினை பறைசாற்றுகிறது. எனவே இதன் போது தோன்றுவது ஒரு வீரத்தின் மனக்கிளர்ச்சி ஆகும். இதுவே வீர ரசம் எனப்படும். இதன் நிறம் மஞ்சள் அல்லது வெண்மை கலந்த சிவப்பு. .இதன் ராகங்கள் ஹம்சத்வனி, நாட்டை, கம்பீர நாட்டை, பிலஹரி, தேவகாந்தாரியும் ஆகும். இந்த ரசமானது மன வலிமையில் இருந்து தோற்றம் பெறுகின்றது. இதன் அனுபாவமாக உறுதி, மனத்துணிவு, வீரம், தியாகம் ஆகும். இவை அனைத்தும் ஒரு வீரனுக்குரிய செயல்கள் ஆகும். இதன் கடவுள் இந்திரன் ஆகும். இதன் ஸ்தாயி பாவம் உற்சாகம் ஆகும். இதன் சாத்வீக பாவங்களாக ரோமாஞ்சம், வியர்வை, நிறமாற்றம், குறள்மாற்றம் என்பன.

அடுத்ததாக நாம் சாந்த ரசத்தினை பற்றி பார்த்தால் கைகேயி இராமனை அழைத்து நீ தந்தையின் கட்டளைக்கு பணிந்து பதினான்கு வனவாசம் பூண வேண்டும் எனக்கூறிய போது இராமன் ஒரு சொல் கூட சொல்லாது பேசாது நின்றான். அவன் மனதில் சாந்தம் குடிகொண்டது. அதன் போது ஏற்படும் ரசம் சாந்த ரசமாகும். இதன் நிறம் வெள்ளை. இதன் ராகங்கள் நாதநாமகிரியை, சாம ஆகும். இந்த ரசமானது அமைதியில் இருந்து தோற்றம் பெற்றது. இதன் அனுபாவமாக கண் மூடியிருத்தல், தியானம், இயற்கையாகவே சிரித்த முகம் என்பன ஆகும். இவ் ரசத்தின் கடவுள் புத்தர் ஆவார்.
[adinserter block=”3″]
அடுத்து நாம் பார்க்க போவது ஹாஸ்ய ரசம். பதினான்கு வருட வனவாசத்தின் பின்னர் ராமனின் மகுடாபிஷேக நேரம் இலக்குமன் சிரித்தான். அவன் சிரித்ததை கண்டு மக்கள் அவனை ஏன் சிரித்தாய் என்று கேட்ட பொழுது பதினான்கு வருடம் என்னை ஆட்கொள்ளாத நித்திரை இப்பொழுது வருகின்றது என கூறி சத்தமாக சிரித்தான். இதனை கேட்ட மக்களும் சிரித்தனர். இந்த மனஉணர்ச்சியின் வெளிப்பாடு ஹாஸ்ய ரசமாகும். இதன் நிறம் வெள்ளை. இதன் ராகங்கள் மோஹனம், காபி, கேதாரம் என்பனவாகும். இந்த ரசத்தின் தோற்றமாக நகைச்சுவை, நகைச்சுவையை தூண்டும் நிகழ்வுகள் ஆகும். இதன் அனுபாவமானது உதடு, மூக்கு, கன்னம், ஆகியன துடித்தல்,சிவத்தல் ஆகும்.
அடுத்ததாக இராமன் சீதை, இலக்குமணன் ஆகிய மூவரும் வனவாசம் செல்லும் போது வழியில் ஓர் ஆற்றினை கடக்க வேண்டியுள்ளமையால் அவர்கள் அங்கு வந்த குகனின் நாடிய போது குகன் மனதில் பக்தியுடன் கூடிய கருணை வெளிப்பட்டது. இதுவே கருணா ரசமாகும். இதன் நிறம் சாம்பல். இதன் ராகங்கள் முகாரி, சஹானா, ஆஹிரி, புன்னாகவராளி ஆகும். இதன் கடவுள் யமன் ஆகும்.இந்த ரசத்தின் தோற்றமாக அன்பு கலந்த கவலை இரக்கம் என்பனவற்றை கொண்டுள்ளது.இதன் அனுபாவமாக கண்ணீர் , ஆழ்ந்த மூச்சு, புலம்புதல், ஆகும்.
அடுத்து பீபத்சம். கைகேயி இராமனை அழைத்து பதினான்கு வருடம் நீ வனவாசம் மேற்கொள்ள வேண்டும் பதினான்கு வருடம் என்மகன் நாடாள வேண்டும் என்று கூறியதும் அதனை கேட்ட பரதன் மனதில் ஒரு விதமான வெறுப்பு உண்டாகியது. இந்த மன உணர்வு பீபத்ச ரசத்தினை குறிக்கின்றது . இதன் நிறம் நீலம். இதன் கடவுள் மகா காலன் ஆகும் . இதன் ராகங்கள் பேகடா, பீம்பிளாஸ், ஆகும். இதன் தோற்றுவாயாக அருவருப்பு உள்ளது. இதன் அனுபாவம் உதட்டை பிதுக்குதல், முகத்தை திருப்புதல், விழிக்களை சுழற்றுதல். இதன் கடவுள் சிவன் ஆகும்.
[adinserter block=”4″]
அடுத்து இராமன், இலக்குமணன் ,சீதை காட்டில் சென்று கொண்டிருந்த வேளையிலே இராவணனின் தங்கை சூர்ப்பனகை இலக்குமனை திருமணம் செய்யுமாறு கேட்க, ஆத்திரம் அடைந்த இலக்குமணன் அவளை துன்புறுத்தும் அளவிற்கு கோபம் கொண்டான். இந்த ரசம் ரௌத்திர ரசமாகும். இதன் நிறம் சிவப்பு. இதன் ராகங்கள் அடாணா ,வசந்தர்,ஆரபி ஆகும். இதன் தோற்றமாக கோபம் ஏற்படுகின்றது. இதன் அனுபாவம் அடித்தல், உடைத்தல், வெட்டுதல், சண்டை போடுதல், கை ஓங்குதல் ஆகும். இதன்கடவுள் ருத்திரர் ஆவார்.
இறுதியாக அற்புத ரசத்தினை நோக்குவோமாயின் இராமன் ஆற்றை கடப்பதற்காக பாலம் அமைத்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு சிறு அணிலும் சேர்ந்து உதவி செய்வதனை கண்ட ராமன் ஆச்சர்யம் அடைகின்றான்.இதில் தோன்றுவது அற்புத ரசமாகும்.இதன் நிறம் மஞ்சள்.இதன் ராகங்கள் லதாங்கி,சாரங்க ஆகும். இதன் தோற்றம் ஆச்சர்யம் இதன் அனுபாவம் அகல விரிந்த கண்,கண் அசைவின்றி பார்த்தல்,மகிழ்வு ,சிலிர்ப்பு,ஆகும்.இதன் கடவுள் ப்ரம்மா ஆவார்.
இவ்வாறு ராமாயணத்தில் பல தரப்பட்ட சம்பவங்களில் நவரசங்கள் மிளிர்வதனை நாம் காணலாம். இருப்பினும் இங்கு குறிப்பிடப்பட்ட சில சம்பவங்களை மாத்திரமே விளக்கி உள்ளேன்.
